ஆன்மிகம்
ஈரோடு கோட்டை சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழாவில் பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்த காட்சி.

ஈரோடு கோட்டை சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

Published On 2021-02-06 04:44 GMT   |   Update On 2021-02-06 04:44 GMT
ஈரோடு கோட்டை சின்னபாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று கோட்டை சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 2-ந் தேதி பக்தர்கள் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். 3-ந் தேதி இரவு 10 மணிக்கு அக்னி கவாளம் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 9மணி அளவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வாங்கி கோவிலுக்கு வழங்கிய எரி கரும்புகள் (குண்டத்துக்கான விறகு) எரிக்கப்பட்டது.

இரவு முழுவதும் குண்டம் கொழுந்து விட்டு எரிந்து நேற்று அதிகாலையில் தீக்கனலாக மாறியது. 60 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் 2 அடி உயரத்தில் பிரமாண்ட தீ குண்டத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் தயார் செய்தனர். காலை 7மணி அளவில் பக்தர்கள் தீ மிதிக்க குண்டம் தயார் செய்யப்பட்டது.

பின்னர் கோவிலின் தலைமை பூசாரி தலைமையில் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பத்ரகாளி அம்மனிடம் குண்டம் இறங்க அனுமதி கேட்டு பூங்கரகம் எடுத்து வந்தார்.

சாமி அருள்பெற்று ஆடிக்கொண்டே வந்த அவர் குண்டம் பூஜைக்கு பின்னர் முதல் நபராக தீ குண்டத்தில் மிதித்து நடந்து சென்றார். அவரைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர். குண்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் தீ மிதித்தனர்.

விழாவையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தொடர்ந்து கோவிலில் பொங்கல் விழா மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது.

நேற்று மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் வீதி உலா நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மறு அபிஷேகமும் நடந்தது.
Tags:    

Similar News