செய்திகள்
கைது

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை- மேலும் 7 பேர் மத்திய பிரதேசத்தில் கைது

Published On 2020-12-03 07:22 GMT   |   Update On 2020-12-03 07:22 GMT
சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.
ஓசூர்:

காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த மாதம் லாரி சென்றபோது, மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் டிரைவர்களை தாக்கி விட்டு, செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு செல்போன்கள் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம் சென்ற தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து செல்போன் கொள்ளையில் தொடர்புடைய பரத் தேவாணி (வயது 37) என்ற முக்கிய குற்றவாளியை டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அமீதாபா தத்தா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார் கூறுகையில், செல்போன்கள் கொள்ளை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும், செல்போன்களை வங்காளதேசத்திற்கு விற்பனை செய்யும் முகவர்கள் ஆவார்கள்.

தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓரிரு நாட்களில் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் தான் இந்த கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்று கூறினர்.
Tags:    

Similar News