செய்திகள்
மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மாணவிகள்

புதுக்கோட்டை எம்பி முயற்சியால் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்ற முன்னாள் மாணவிகள்

Published On 2021-10-13 14:05 GMT   |   Update On 2021-10-13 14:05 GMT
கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்காமல் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை:

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் பணியிடம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அதற்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும், அப்போதுதான் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு  தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. 



அந்தக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குமாறு கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்காமல் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர். 

இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் மாணவிகள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவை சந்தித்து முறையிட்டனர். உடனே கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்ட மாநிலங்களவை உறுப்பினர், மாணவிகளுக்கு தமிழ் வழி பயின்ற சான்று வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கியது. இதற்காக, மாணவிகள் அனைவரும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News