உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா

Published On 2022-01-12 08:33 GMT   |   Update On 2022-01-12 08:33 GMT
காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சென்று வருவதால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி நெல்லையில் தொற்று பாதிப்பு பூஜ்ஜியமாக இருந்தது. அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 1-ந்தேதி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 17 ஆக இருந்தது. அதன்பின்னர் உயர தொடங்கிய பாதிப்பு எண்ணிக்கை 6-ந்தேதி 73 ஆக ஆனது.

இந்நிலையில் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் புதிதாக 421 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளியான பரிசோதனை முடிவில் 382 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாநகர பகுதியில் 192 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாநகர பகுதியில் 204 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அம்பையில் 40 பேருக்கும், பாளையில் 23 பேருக்கும், ராதாபுரத்தில் 25 பேருக்கும், வள்ளியூரில் 31 பேருக்கும், சேரன்மகாதேவியில் 17 பேருக்கும், நாங்குநேரியில் 15 பேருக்கும், பாப்பாகுடியில் 10 பேருக்கும், களக்காட்டில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பாதிப்பில் சுமார் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார், செவிலியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாந்திநகர் போலீஸ் குடியிருப்பு, சந்திப்பு போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் போலீஸ்காரர்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வங்கி ஊழியர்கள் சிலருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி டாக்டர் படிப்பு பயின்று வரும் மாணவர்கள் சுமார் 15 பேருக்கும், மாணவிகள் விடுதியில் தங்கி பயிலும் சில மாணவிகளுக்கும், சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூடி வருகின்றனர். காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் சென்று வருவதால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News