செய்திகள்
சாலை குண்டும், குழியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.

நொய்யல் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

Published On 2020-11-20 04:37 GMT   |   Update On 2020-11-20 04:37 GMT
நொய்யல் அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்:

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூரில் இருந்து செல்வநகர், செட்டிதோட்டம், எம்.ஜி.ஆர்.நகர், கவுண்டன்புதூர், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக உள்ளாட்சி துறை நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தார்சாலை தரமற்ற சாலையாக இருந்ததால் தற்பொழுது மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.

இந்த தார் சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வந்தன. இப்பொழுது இந்த தார் சாலை வழியாக லாரிகள், கார்கள், வேன்கள் போன்றவையும், இப்பகுதிகளை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும்போது குண்டும், குழியுமாக உள்ள இடம் தெரியாமல் வாகனங்களின் டயர்கள் குழிகளில் பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

மேலும், அடிக்கடி வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு அவதியுற்று வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை சீரமைத்து விபத்தைத் தடுக்க வேண்டும்.

என செல்வநகர், செட்டி தோட்டம், கவுண்டன்புதூர், எம்.ஜி.ஆர். நகர், ஒரம்புப்பாளையம் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News