ஆன்மிகம்
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் திருப்பூட்டு யாகம் நடந்தபோது எடுத்தபடம்.

எட்டெழுத்து பெருமாள் கோவிலில் திருப்பூட்டு யாகம்

Published On 2020-01-13 05:01 GMT   |   Update On 2020-01-13 05:01 GMT
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் திருப்பூட்டு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கவும், அவர்களுக்கு ஏதேனும் திருமண தடை இருந்தால் அதுவிலகவும் திருப்பூட்டு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான திருப்பூட்டு யாகம் நேற்று மாலையில் நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் எட்டெழுத்து பெருமாள், சிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்பசுவாமி, ராமதூத பக்த ஆஞ்சநேயர், விநாயகர், முருகர், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.

மாலை 3-30 மணிக்கு அன்னபூரணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூட்டு யாகம் நடந்தது. இதில் திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு யாகத்தில் கலந்து கொண்டு நவதானியங்கள், மூலிகை பொருட்களை போட்டனர். மாலை 5-45 மணிக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கரும்பும், மஞ்சள் குலையும், மஞ்சள், குங்குமம் அடங்கிய பொருட்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News