ஆன்மிகம்
சபரிமலை

சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்தது

Published On 2020-11-23 06:01 GMT   |   Update On 2020-11-23 06:01 GMT
சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜை வழிபாட்டுக்கு 2027-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிவடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதுபோக பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சபரிமலையில் பூஜை வழிபாடு கட்டணம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாத பூஜை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த உதயாஸ்தமன பூஜை வழிபாடு கொரோனா காரணமாக பல மாதங்கள் முடங்கி போனது. இதன் காரணமாக இந்த சிறப்பு பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. படி பூஜைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக ரூ.40 ஆயிரத்தில் உதயாஸ்தமன பூஜை நடத்தப்படுகிறது.

இந்த பூஜை டிசம்பர் 15-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் நடைபெறும். பின்னர் டிசம்பர் 31 முதல் ஜனவரி 10-ந் தேதி வரையும், ஜனவரி 15 முதல் 19-ந் தேதி வரையும் நடத்தப்படும். உதயாஸ்தமன பூஜை வழிபாடு காலை 8 மணி முதல் அத்தாள பூஜை வரை 18 பூஜைகளாக நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கான முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்து விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News