செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்து 3 மாவட்டங்களில் தட்டுப்பாடு

Published On 2021-05-09 07:39 GMT   |   Update On 2021-05-09 07:39 GMT
மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ரெம்டெசிவிர் விற்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது. பலர் விடிய விடிய காத்திருந்து வாங்கி சென்றனர்.

சென்னை:

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை இல்லை.

அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதிலும் இருந்து மருந்து வாங்க சென்னைக்கு படையெடுத்தனர்.

ஒரு குப்பி மருந்து ரூ.1,568 என்ற விலையில் ஒருவருக்கு 6 குப்பிகள் வழங்கப்படுகிறது. நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் அட்டை, டாக்டர் பரிந்துரை சீட்டு ஆகியவற்றை காட்டி மருந்து வாங்கி கொள்ளலாம்.

மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ரெம்டெசிவிர் விற்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது. பலர் விடிய விடிய காத்திருந்து வாங்கி சென்றனர்.


இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இன்று முதல் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 5 இடங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று கூட்டம் வெகுவாக குறைந்தது.

திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிசியோதெரபி கல்லூரியில் நேற்றே விற்பனை தொடங்கியது. குறைந்த அளவே மருந்து இருந்ததால் அனைத்தும் விற்று தீர்ந்தது. இன்று விற்பனை இல்லை.

நெல்லையில் விற்பனை நேற்று தொடங்கியது. 24 பேருக்கு வழங்கப்பட்டது. இன்று மருந்து இல்லாததால் விற்பனை இல்லை. நாளை முதல் தினமும் 300 பேருக்கு விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று விற்பனை தொடங்கியது.500 டோஸ் மருந்து வந்திருந்தது. அனைத்தும் நேற்று விற்று தீர்ந்தது. ஸ்டாக் இல்லாததால் இன்று விற்பனை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று மாலையில் விற்பனை தொடங்கியது. 80 பேருக்கு விற்கப்பட்டது. இன்று 200 பேருக்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நேற்று 600 குப்பி மருந்து விற்பனையானது. இன்று 2-வது நாளாக விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News