ஆன்மிகம்

பணிவு, தற்பெருமையை கைவிடுவது

Published On 2019-06-25 04:38 GMT   |   Update On 2019-06-25 04:38 GMT
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திரும்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான பணிவாக இருப்பது மற்றும் தற்பெருமையை கைவிடுவது குறித்த தகவல்களை காண்போம்.

ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது. தற்பெருமை உள்ளவனிடம் உப்புக்குக்கூட பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒன்று இருந்தால் மற்றொன்று விலகிபோய்விடும்.

‘பணிவு’ என்பது நபிமார்கள், நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும். ‘தற்பெருமை’ என்பது சைத்தானின் தனிப்பெரும் நடவடிக்கையும், சர்வாதிகாரிகளின் போக்கும் ஆகும்.

இறைநம்பிக்கையாளர்கள் பணிவை வெளிப் படுத்துவார்கள். தற்பெருமையை தூக்கி எறிவார்கள். இறைநம்பிக்கை குடியிருக்கும் உள்ளத்தில் பணிவு இருக்கும். அது வெளிப்பட வேண்டிய விதத்தில் வெளிப்படும். அதே வேளையில் இறைநம்பிக்கையும், தற்பெருமையும் ஒன்று சேர வாய்ப்பில்லை.

பணிவு என்பது அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதோ, காக்காய் பிடிப்பதோ, காலில் விழுவதோ, எதற்கெடுத்தாலும் ‘ஆமாம்’ என்று கூறுவதோ, தலையை ஆட்டிக்கொண்டிருப்பதோ, உடலை கூனிக்குறுகி வளைப்பதோ அல்ல என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, உடலில் தோன்றும் நடிப்போ கிடையாது. அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவை ஆகும். மேலும் பிறரை புண்படுத்தாமலும், மற்றவரை புரிந்து, மதித்து நடப்பதுமே பணிவு.

பணிவு என்பது இழிவோ, கோழைத்தனமோ அல்ல. அது உயர்வு தரும் அரும்பெரும் குணம். இறைவனுக்காக மற்றவர்களிடம் பணிந்து நடக்கும் போது வானமே குனிந்து நமக்கு குடை பிடிக்கும். பூமியோ தாழ்ந்து விரிப்பு விரிக்கும். வானளாவிய அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த உயர்வு நிச்சயம் சாத்தியம் என்பதை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

‘தர்மம் செய்வதால் பொருளாதாரம் குறைந்து விடாது. ஒரு அடியானை இறைவன் மன்னிப்பதால் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டான். இறைவனுக்காக பணிந்து நடக்கும் எந்த மனிதனையும் இறைவன் உயர்த்தாமல் விட்டதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

இறைவன் பணிவைக் கற்றுத்தர விரும்பி அனைத்து நபிமார்களையும் ஆடு மேய்ப்பாளராக பணிபுரிய வைத்துள்ளது, பணிவு எனும் குணத்திற்கு கிடைத்த மகுடம் ஆகும்.

‘இறைவன் எந்த ஒரு நபியையும் ஆடு மேய்ப்பாளராகவே அன்றி அனுப்பவில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘தாங்களுமா?’ என நபித்தோழர்கள் கேட்டார்கள். ‘ஆம், மக்காவாசிகளுக்காக ‘கராரீத்’ எனும் இடத்தில் நானும் ஆடு மேய்த்திருக்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

பணிவு என்பது கனிவை உருவாக்கும். பணிவு என்பது பாசத்தை வளர்க்கும், பிளவை தவிர்க்கும். பிரிவை குறைக்கும்.

நாம் இறைவனிடம் காட்டும் பணிவு- சிரசை தாழ்த்துவது, கூனிக்குறுகி குனிந்து நிற்பது, அவனிடம் கையேந்துவது போன்றதாகும்.

பெற்றோரிடம் காட்டும் பணிவு- அவர்களிடம் அன்புடன், அடக்கத்துடன், குரலை தாழ்த்தி பேசுவது, அவர்களுக்கு பணிவிடை செய்து, பணிந்து நடப்பதில், அவர்களுக்காக பிரார்த்திப்பதில் வெளிப்படுகிறது.

‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக்கூறாதே, அவ்விருவரையும் விரட்டாதே, மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு, அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக, சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா, இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக என்று கேட்பீராக’. (திருக்குர்ஆன் 17:23,24)

இவ்வாறு பணிந்து நடக்கும் குழந்தைகளுக்குத்தான் பெற்றோரின் பிரார்த்தனை கிடைக்கும். அவர்களின் எதிர்கால வாழ்வும் சிறக்கும்.

பணிவுள்ள கணவனால் தான் மனைவியை முழுதிருப்திப்படுத்த முடியும். பணிவுள்ள மனைவிக்குத்தான் கணவனின் முழுபாசம் கிடைக்கும்.

பணிவுள்ள மாணவ செல்வங்களுக்குத்தான் ஆசிரியரின் கல்வியும், அரவணைப்பும் கிடைக்கும். பணிவுள்ள தொழிலாளிக்குத்தான் முதலாளியின் உதவியும், உபகாரமும் கிடைக்கும்.

நிமிர்ந்து வாழ வீடு இருந்தாலும், பணிந்து நடக்க வாசல்படி வேண்டும். விட்டுக்கொடுப்பதும் பணிவின் அடையாளமே. அவர்கள் வாழ்வில் என்றும் கெட்டுப் போனதில்லை.

நாட்டுக்காக, மக்களுக்காக பாடுபடுவது சேவை என்றால், வீட்டு மக்களுக்காக பாடுபடுவது பணிவு, பணிவிடை ஆகும்.

ஜனாதிபதியாக உமர் (ரலி) இருந்த வேளையில் குடும்பத்தினருக்காக தமது இடது கையில் இறைச்சியையும், வலது கையில் மளிகை பொருட்களையும் சுயமாக சுமந்து கொண்டு வந்தார்கள்.

மர்வான் (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். கவர்னராக பதவி வகித்துக் கொண்டு, கடைவீதிக்குச் சென்று, விறகுகளை வாங்கி, தானாக சுமந்து கொண்டு வீடு திரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏழை-பணக்காரர், சிறியவர்- பெரியவர் என அனைவரிடமும் கை கொடுப்பார்கள். தன்னை எதிர்நோக்கும் தொழுகையாளிகளில் சிறியவர்- பெரியவர், கறுப்பர்-சிவப்பர், அடிமை-எஜமான் எவராக இருந்தாலும் முந்திக்கொண்டு ஸலாம் கூறுவார்கள். இது நபியவர்களின் பணிவான நடத்தையாகும்.

தற்பெருமை வேண்டாம்

‘நீங்கள் பணிவாக நடக்க வேண்டும். எவரும் எவரை விடவும் பெருமை கொள்ளக்கூடாது. எவரும் எவரின் மீதும் வரம்பு மீறக்கூடாது’ இவ்வாறு இறைவன் எனக்கு செய்தி அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இயாள் பின் ஹிமார் (ரலி), நூல்: முஸ்லிம்)

பெருமை என்றால் என்ன?

சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாக கருதுவதும் தான் பெருமை.

இத்தகைய பெருமை ஏன் ஏற்படுகிறது?

ஒருவன் தன்னை மற்றவரைவிட உயர்வானவனாகவும், பிற மக்களை சிறுமையாகவும், பிறர் தமக்கு பணிய வேண்டும் என நினைத்து பெருமிதம் கொள்வதினால் ஏற்படுகிறது.

இதுகுறித்த நபிமொழி வருமாறு:

‘பெருமை என்பது உள்ளத்தில் தோன்றும் ஒரு உணர்வு. எவரின் உள்ளத்தில் அணு அளவு பெருமை உள்ளதோ, அவர் சொர்க்கம் புகமாட்டார்’ என்று நபிகளார் கூறினார்கள்.

அப்போது அருகில் இருந்தவர், ‘ஒருவர் தனது ஆடை அழகாக இருக்கவேண்டும்; தமது மிதியடி அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது பெருமையாகாதா?’ என வினவினார்.

அதற்கு நபியவர்கள் ‘இறைவன் அழகானவன்; அவன் அழகானதை விரும்புகிறான். (இவ்வாறு விரும்புவது பெருமையாகாது) பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும், மக்களை இழிவாக நினைப்பதும் ஆகும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)

உள்ளத்தில் பெருமை தோன்றினாலும், அது வெளிப்படும் நபர்களை வைத்து பலவிதமாக காட்சி தருகிறது. நிறப்பெருமை, மொழிப் பெருமை, குலப்பெருமை, குடும்பப் பெருமை, பணப்பெருமை, பதவிப்பெருமை, மண்பெருமை, பொன் பெருமை, குழந்தைப்பெருமை, தற்பெருமை போன்ற வடிவங்களில் பரிணாமம் பெறுகிறது.

எது எப்படியோ எந்தவித பெருமையும் இஸ்லாத்தில் கூடாது. அது இறைநம்பிக்கைக்கு எதிரானது. இறைநம்பிக்கையாளரிடம் அது ஒரு போதும் தென்படக்கூடாது. பெருமைப்பட தகுதியுள்ள ஒருவன் இறைவன் மட்டுமே.

‘கண்ணியம் என் கீழ் ஆடை; பெருமை என் மேலாடை. இவ்விரண்டில் ஒன்றை என்னிடமிருந்து கழற்ற நினைப்பவனை நிச்சயம் நான் அவனை வேதனை செய்வேன் என இறைவன் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

ஆணவம் கொண்டோர் இந்த உலகத்திலேயே அடியோடு அழிக்கப்பட்ட வரலாற்று சான்றுகள் திருக்குர்ஆன் நெடுகிலும் பரவி விரவிக்கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.

மூஸா (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவன் காரூன். இவனுக்கு ஏராளமான செல்வங்கள் வழங்கப்பட்டிருந்தது. தமது செல்வத்தைக் கொண்டு பெருமையடித்தான். அதனால் அவன் பூமியில் புதைந்து போனான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நிச்சயமாக காரூன், மூஸா (அலை) சமூகத்தைச் சார்ந்தவன். எனினும் அவர்கள் மீது அவன் அட் டூழியம் செய்தான். அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம். நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன. அப்பொழுது அவனது கூட்டத்தார் அவனிடம் ‘நீ இதனால் ஆணவம் கொள்ளாதே. நிச்சயமாக இறைவன் ஆணவம் கொள்வோரை நேசிப்பதில்லை என்றார்கள்’. (திருக்குர்ஆன் 28:76)

‘அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்’. (திருக்குர்ஆன் 28:81)

பிர் அவ்ன் தமது அதிகாரத்தை வைத்து ஆணவ ஆட்டம் போட்டான். அதனால் அவன் கடலில் மூழ்கி அழிந்து போனான்.

ஆத் கூட்டத்தார் தமது பலத்தை நம்பி பெருமை யடித்தனர். அதனால் அவர்கள் புயல் காற்றினால் வீழ்ந்து போனார்கள்.

சைத்தான் வானவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தும் பெரிய அறிவாளியாக இருந்தான். முதல் மனிதர் ஆதமுக்கு நான் ஏன் பணிய வேண்டும்? என்று திமிராகவும், பெருமையாகவும் பேசியதால் அவன் சொர்க்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, சபிக்கப்பட்டவனாக மாறிவிட்டான்.

‘ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அருகாமையில் இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வலது கையால் சாப்பிடும்படி அவரிடம் நபிகளார் வேண்டினார். ‘என்னால் அது முடியாது’ என அவர் ஆணவத்துடன் கூறினார். ‘இனி உன்னால் முடியவே முடியாது’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸலமா பின் அக்வா (ரலி), முஸ்லிம்)

ஆணவத்துடன் நடந்துகொண்ட இவருக்கு வாழ்நாள் முழுவதும் வலது கை செயல் இழந்து போய்விட்டது.

ஆணவத்துடன் நடந்து கொண்டோருக்கு இவ்வுலகில் ஏற்பட்ட இழிவையும், அழிவையும் தெரிந்து கொண்டோம். நாளை மறுமையிலும் அவர்களுக்கு இழிவும், அழிவும் உண்டு.

‘சொர்க்கமும், நரகமும் வாதம் செய்தன. நரகம் என்னிடம் சர்வாதிகாரிகளும், பெருமையாளர்களும் வருவார்கள் என்றது. சொர்க்கம் என்னிடம் அப்பாவிகளும், ஏழைகளும் வருவார்கள் என்றது என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்)

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திரும்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)

‘மறு உலகம் அதை பூமியில் உயர் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளோம்’. (திருக்குர்ஆன் 28:83)

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
Tags:    

Similar News