செய்திகள்
பொது இ-சேவை மையம்

பொது இ-சேவை மையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை தேவை

Published On 2020-11-22 04:14 GMT   |   Update On 2020-11-22 04:14 GMT
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இ-சேவை மையங்களை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:

தமிழக அரசு பொது மக்கள் நலன் கருதி அரசு துறைகளிலிருந்து பல்வேறு சேவைகளை எளிதில் பெற்றிட சேவை மையங்களை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மூலம் இந்த சேவை மையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் எளிதில் அரசு துறை சேவைகளை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் துறையில் பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், சமூக நலத்துறையில் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கவும், ஓய்வூதியம் பெறுபவர்கள் சான்றிதழை அனுப்பி வைக்கவும், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

அதிலும் குறிப்பாக ஆதார் அட்டை பெறுவதற்கு இ-சேவை மையங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்தநிலையில் சமீபகாலமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையங்கள் முடக்கம் அடைந்துள்ளன.

அதிலும் குறிப்பாக கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த இ-சேவை மையங்கள் முடக்கம் அடைந்துள்ளன.

விருதுநகரில் கந்தபுரம் தெருவில் கடந்த 3 மாதங்களாக கூட்டுறவுத்துறை சார்பில் செயல்பட்டு வந்த இ-சேவை மையம் முடக்கம் அடைந்துள்ளது.

தனியார் சேவை மையங்களுக்கு சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் முடங்கியுள்ளதால் குறைதீர்க்கும் நாள் அன்று மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் பொது இ-சேவை மையங்களை முறையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதிலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Tags:    

Similar News