செய்திகள்
வீடுகளின் மீது இடிந்து விழுந்த காம்பவுண்டு சுவர்.

கோவை அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

Published On 2019-12-02 03:12 GMT   |   Update On 2019-12-02 06:03 GMT
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி  கன்னியாகுமரி  மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடுகள் உள்ளது. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள குடியிருப்பின் பின்பக்க காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அந்த சுவர் 4  ஓட்டு வீடுகளின்  மீது  வரிசையாக விழுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள்  சுதாரித்து எழுவதற்குள்  வீட்டின் சுவர் விழுந்து அமுக்கியது.

இதனால் சிறுவன், சிறுமி உள்பட  17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

1. ஆனந்தன் (40)
2. நதியா (36)
3. லோகுராம் (8)
4. அட்சயா (6),
5. ஹரிசுதா(17)
6. ஓபியம்மாள் (60)
7. நிவேதா (19)
8. குரு (45)
9. சிவகாமி (50)
10. வைதேகி (20)
11. திலவகதி (50).



மேலும் 6 பேர் பெயர் விவரம் தெரியவில்லை. 17 பேர் உடல்களை   தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

4 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் பலியான  தகவல் கிடைத்ததும்  அவர்களது உறவினர்கள், கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.  பலியானவர்கள் உறவு முறை உடனடியாக தெரியவில்லை. 4 வீடுகள் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் மேட்டுப்பாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News