செய்திகள்
கொளத்தூர் ஜவகர் நகரில் மழை காரணமாக வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது

நீர்நிலைகளாக காட்சி அளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்

Published On 2021-11-29 03:58 GMT   |   Update On 2021-11-29 03:58 GMT
சென்னை புறநகர் பகுதிகள் நீர்நிலைகள் போன்று காட்சி அளிக்கின்றன. திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் ஓடுகிறது. வெள்ளநீர் எப்போது வடியும் என்று மக்கள் ஏங்குகின்றனர்.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பெருமழையால் ஏரிகள், குளம்-குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 சிறிய ஏரிகளில் 506 ஏரிகள் நிரம்பின. எனவே நின்னகரை, பொத்தேரி, வல்லாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற ஏரிகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றன.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆறு போன்று மாறியது. சாலையின் இருபுறங்களில் ஏரி உபரிநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் படகு போன்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் ஊருக்குள்ளும் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும் சூழ்ந்தது. சாலையோர கடைகளும் வெள்ளநீரால் சூழப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் வெள்ளநீர் ஆக்ரோஷமாக சீறி பாய்ந்து செல்கிறது. இந்த காட்சியை பார்க்கிறபோது நீர்நிலைகளுக்குள் குடியிருப்புகள் இருப்பது போன்று இருக்கிறது. கீழ்த்தள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. எனவே மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஊரப்பாக்கம், தைலாவரம், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம் போன்ற பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி உதயசூரியன் நகரில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. எப்போது வெள்ளநீர் வடியும் என்று மக்கள் ஏக்கத்துடன் ஒவ்வொரு நொடி பொழுதையும் கடந்து வருகின்றனர்.

தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம், மேடவாக்கம் போன்ற குடியிருப்பு பகுதிகளிலும் ஏரி தண்ணீர் புகுந்து மக்களை பரிதவிக்க வைத்துள்ளது. இந்த பகுதியில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். வெள்ளநீர் வடிந்த பின்னர் திரும்ப வருவோம் என்ற மனநிலையில் பலர் மூட்டை, முடிச்சுகளுடன் தங்கள் உறவினர் வீடுகளுக்கும், சொந்த ஊர்களையும் நோக்கி புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். தேங்கி கிடக்கும் வெள்ளநீரால் மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி, திருநின்றவூர், குன்றத்தூர் உள்பட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திரும்பிய திசை எல்லாம் தண்ணீராக காட்சி அளிக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வியாபாரிகளின் இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. கால்நடைகளும், தெருநாய்களும் இரை கிடைக்காமல் தவிக்கின்றன.

வெள்ளநீரில் தவிக்கும் மக்களுக்கு சோதனை மேல் சோதனை தருவது போன்று பாம்பு போன்ற விஷ ஜந்துகள் படையெடுத்து வருகின்றன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். வெள்ளநீர் எப்போது வடியும் என்று ஏங்குகின்றனர்.

மழைவெள்ள பாதிப்பு ஏற்படும்போது படகில் மீட்டு சென்று தற்காலிக முகாம்களில் தங்க வைத்து ஆறுதல் கூறுவது தற்காலிக தீர்வாக இருக்கிறது. மழை காலம் வந்தாலே தண்ணீர் தேங்காதவாறு உரிய திட்டங்களை வகுத்து நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Tags:    

Similar News