செய்திகள்
எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.

வயதாகிவிட்டதால் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும்: எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.

Published On 2021-06-18 02:41 GMT   |   Update On 2021-06-18 02:41 GMT
அரசு நிர்வாகத்தில் எடியூரப்பாவின் குடும்பத்தினரின் தலையீடு, ஊழல் மிதமிஞ்சி போய்விட்டது. பா.ஜனதா ஆட்சி பற்றி மக்கள் மிக தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கை பெங்களூருவில் நேற்று சந்தித்த பிறகு எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டது. குறைந்தபட்ச பொது அறிவு உள்ளவர்கள் முதல்-மந்திரியாக வர வேண்டும். மாநிலத்தின் நலன் கருதி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை விட்டு விலக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தை நடத்த முடியாத நிலையில் பதவியில் நீடிப்பது சரியல்ல. கட்சி மேலிடம் விரும்பினால் பதவியை விட்டு விலக தயார் என்று எடியூரப்பாவே கூறியுள்ளார். அதனால் அவர் கவுரவமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எடியூரப்பாவை வழிகாட்டுதல் குழுவில் சேர்க்க வேண்டும். எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று சிலர் நேரடியாக கூறியுள்ளனர். வேறு சிலர் இந்த கருத்தை நேரடியாக கூறாவிட்டாலும், மறைமுகமாக அதை ஆதரித்து கருத்துகளை கூறியுள்ளனர். எடியூரப்பாபதவி விலகினால், வீரசைவ லிங்காயத்தில் பஞ்சமசாலி பிரிவை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி கிடைக்கும். அதற்கு எனது ஆட்சேபனை இல்லை.

எனக்கு மந்திரி பதவி வழங்காததால் அதிருப்தியில் இந்த கருத்தை கூறவில்லை. எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதால் அவரால் நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒருவர் முதல்-மந்திரி ஆக வேண்டும். பா.ஜனதாவிலும் ராட்சச அரசியல் நடக்கிறது. அதிகளவில் ஊழல் நடக்கிறது. முதல்-மந்திரியின் மகன் விஜயேந்திரா அனைத்து துறைகளிலும் மூக்கை நுழைக்கிறார்.

நீர்வளத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர் அனுமதி வழங்கியுள்ளனர். இதில் சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், கட்சி மேலிடத்திற்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று எடியூரப்பா சொல்கிறார். இத்தகைய அரசு நீடிக்க வேண்டுமா?. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் என்ன நடந்ததோ அதே குடும்ப அரசியல் தான் பா.ஜனதாவிலும் நடக்கிறது.

ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் விஜயேந்திரா கையில் உள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. அதிகார மையமாக திகழும் விதான சவுதாவின் தாக்கம் பலம் குறைந்து, மடாதிபதிகளின் பலம் அதிகரித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை எங்கேயோ சிலர் உட்கார்ந்து கொண்டு நடத்துகிறார்கள்.

அரசு நிர்வாகத்தில் எடியூரப்பாவின் குடும்பத்தினரின் தலையீடு, ஊழல் மிதமிஞ்சி போய்விட்டது. பா.ஜனதா ஆட்சி பற்றி மக்கள் மிக தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். எடியூரப்பா குறித்து மக்கள் கவுரவமாக பேசுகிறார்கள். ஆனால் ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் பலத்தை அவர் இழந்துவிட்டார். லிங்காயத் சமூகத்தினருக்கு மட்டுமே முதல்-மந்திரி பதவியை கொடுப்பது சரியல்ல.

அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இதுவரை 8 பேர் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளனர். அதனால் பஞ்சமசாலி பிரிவினருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும். அந்த பிரிவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத், முருகேஷ் நிரானி ஆகியோரில் ஒருவரை முதல்-மந்திரி ஆக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் கூறியுள்ள இந்த அம்சங்களை மேலிட பொறுப்பாளரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
Tags:    

Similar News