செய்திகள்
கொரோனா வைரஸ்

மு.க.தமிழரசு-சகாயத்துக்கு கொரோனா: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2021-04-07 07:36 GMT   |   Update On 2021-04-07 07:36 GMT
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மு.க. தமிழரசு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஏற்கனவே கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வுபெற்றவர் சகாயம். (வயது 58). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தார்.

இதற்காக சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பை தொடங்கி இருந்தார். அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சகாயம் பிரசாரமும் செய்தார்.

இந்தநிலையில் சகாயத்துக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற பாதிப்புக்கள் இருந்தது. உடனடியாக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News