உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்குங்கள்: உள்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published On 2022-01-17 16:40 GMT   |   Update On 2022-01-17 16:40 GMT
மத்திய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கிட வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதலமைச்சர், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும்;  கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையுத் சுட்டிக் காட்டியுள்ளார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 "எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று டெல்லியில் டி.ஆர். பாலு எம்.பி., உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார்.

Tags:    

Similar News