செய்திகள்
விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையில் இன்று ரூ.1324 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-11-22 08:00 GMT   |   Update On 2021-11-22 08:00 GMT
கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்கள், முடிவுற்ற பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக இன்று மதியம் கோவை வந்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி மைதானத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை அவர் காரில் வரும் வழிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.



பின்னர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் வ.உ.சி. மைதானத்திற்கு சென்றார்.

அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.587.91 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 70 பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் பல அரசு துறைகளின் சார்பில் ரூ.646.61 கோடியில் 25,123 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.

கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்பதற்காக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க.வினர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை வ.உ.சி மைதானத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மைதானத்தில் போடப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்திருந்தனர்.

மைதானத்தில் பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

முதல்- அமைச்சர் வருகையையொட்டி கோவையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மேடை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மாநகரில் உள்ள காந்திபுரம் பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், முக்கிய கடைவீதிகள், விமான நிலையம் முதல் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் வரை உள்ள அவினாசி சாலையின் இருபுறமும் போலீசார் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாராது பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருப்பூர் செல்கிறார்.

மாலை 5 மணியளவில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். விழாவில், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவுற்ற பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை கொடிசியாவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். அதனை முடித்து கொண்டு நாளை மதியம் தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.


Tags:    

Similar News