செய்திகள்
கைது

ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி கைது

Published On 2021-02-23 13:49 GMT   |   Update On 2021-02-23 13:49 GMT
ஊத்துக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் மின் மோட்டார் அமைப்பதற்கு அனுமதி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 49). இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், இவரிடம் பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் (35) என்பவர் அணுகி விவசாய நிலத்தில் புதிய மின் மோட்டாரை பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரி லோகநாதன் அவரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

ஆனால் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சுரேஷ் கூறினார். ரூ.5 ஆயிரம் கொடுத்தால்தான் புதிய மின் மோட்டார் அமைக்க முடியும் என்று அதிகாரி லோகநாதன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதுகுறித்து விவசாயி சுரேஷ் திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களது ஆலோசனை பேரில், சுரேஷ் நேற்று மின்வாரிய அதிகாரி லோகநாதனிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், தமிழ்செல்வி ஆகியோர் அதிகாரி லோகநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்த கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரி லோகநாதனை புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News