தொழில்நுட்பச் செய்திகள்
கூகுள் பிளே பாஸ்

இந்தியாவில் கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை- ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செம அறிவிப்பு

Published On 2022-02-28 06:38 GMT   |   Update On 2022-02-28 06:38 GMT
இந்த சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன.
கூகுள் நிறுவனம் தனது “கூகுள் பிளே பாஸ்” சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தா சேவையில் மாதம் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் மொபைல் கேம்களை விளம்பரம் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திகொள்ளலாம். 

பொதுவாக கேம் அல்லது செயலியில் சில அம்சங்களை பயன்படுத்துவதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதேபோல சில செயலிகளையே பணம் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். இந்த சந்தா சேவையில் அந்த கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம். 

இந்த வாரத்தில் இருந்து இந்த சேவை இந்தியாவில் கிடைக்கும் என்றும், தற்போது கூகுள் பிளே பாஸ் சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 41 பிரிவுகளில் 59 நாடுகளில் இருந்து வெளியாகும் செயலிகள் மற்றும் கேம்கள் இந்த சேவையில் தரப்பட்டுள்ளன.

இந்த பிளே பாஸில் இந்திய தயாரிப்புகளான ஜங்கிள் அட்வெஞ்சர்ஸ், வேர்ல்ட் கிரிக்கெட் பேட்டில் 2 உள்ளிட்ட 15 செயலிகள், கேம்களும் தரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் மேலும் தயாரிப்புகளை இணைப்பதற்கு கூகுள் பணியாற்றி வருவதாகவும், மாதம் மாதம் கேம்கள் மற்றும் செயலிகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளது.



இந்தியாவில் இந்த சேவைக்கு 1 மாதத்திற்கு ட்ரையல் வடிவில் கிடைக்கும். அதன் பிறகு மாதம் ரூ.99 அல்லது வருடத்திற்கு ரூ.889 என்ற கட்டணங்களில் இந்த சேவை வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த சேவையை ப்ரீபெய்ட் ஒரு மாத சந்தாவாக ரூ.109-க்கும் பெறலாம். இந்த சேவையை ஒரே கணக்கில் 5 பேர் வரை பயன்படுத்திகொள்ளலாம்.

இந்த சேவை ஆண்ட்ராய்டு 4.4 அல்லது அதற்கும் மேலான வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் என்றும், 16.6.25 வெர்ஷன் கூகுள் பிளே செயலியும் இதற்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News