செய்திகள்
அதிமுக

12 தொகுதிகள் கேட்கும் தமாகா- தயங்கும் அதிமுக

Published On 2021-02-19 08:28 GMT   |   Update On 2021-02-19 08:28 GMT
வருகிற தேர்தலிலும் குறைந்த பட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னத்தை பெற முடியும். எனவே 12 தொகுதிகள் ஒதுக்கும்படி அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. சைக்கிள் சின்னத்தை பெறுவதற்காக போராடுகிறது.

1996-ல் ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா.வை தொடங்கினார். அப்போது சைக்கிள் சின்னம் வழங்கப்பட்டது.

2001- வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட்டது. மூப்பனார் மறைவுக்கு பிறகு கட்சியை கலைத்துவிட்டு ஜி.கே.வாசன் காங்கிரசில் இணைந்தார். 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் காங்கிரசில் இருந்து விலகி ஜி.கே.வாசன் த.மா.கா.வை தொடங்கினார்.

கடந்த தேர்தலில் த.மா.கா. மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் வழங்கப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணைய விதிப்படி 2 தொகுதிகளில் போட்டியிடாததால் சைக்கிள் சின்னத்தை இழக்க வேண்டியதாயிற்று. தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் போட்டியிட்ட த.மா.கா.வுக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டது.

வருகிற தேர்தலிலும் குறைந்த பட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே சைக்கிள் சின்னத்தை பெற முடியும். எனவே 12 தொகுதிகள் ஒதுக்கும்படி அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால் 7 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் கட்சியை வழிநடத்த சின்னத்துக்கான அங்கீகாரத்தை பெற ஜி.கே.வாசன் விரும்புகிறார். ஆனால் கூட்டணி சூழ்நிலையில் 12 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தயங்குகிறது.

Tags:    

Similar News