செய்திகள்
வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

கொடைக்கானலில் 7 மணிக்கே வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

Published On 2021-04-06 11:34 GMT   |   Update On 2021-04-06 11:34 GMT
கொடைக்கானலில் அதிகாலை 7 மணிக்கே தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொடைக்கானல்:

பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானல் மற்றும் கீழ்மலை, மேல்மலை கிராமங்களில் ஆண் வாக்காளர்கள் 45,977 பேரும், பெண் வாக்காளர்கள் 46,317 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7 நபர்களும் என மொத்தம் 92,301 வாக்களர்கள் உள்ளனர். 137 வாக்குச்சாவடி மையங்களில் இன்று வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரும் அனைவருக்கும் முகக்கவசம், கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி, கையுறை உள்ளிட்டவைகளை சுகாதார துறையினர் வழங்கினர்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நிலவி வரும் குளிரினை பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். குறிப்பாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்பாகவே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதி செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் உள்ள 272 வாக்கு சாவடி எண்ணில் உள்ள மின்னணு வாக்கு எந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்காளர்கள் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து வாக்கு எந்திரம் சரி செய்த பின் பொதுமக்கள் வாக்கு அளித்து சென்றனர்.

இந்த வாக்கு சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு துவங்கியதால் ஒரு மணி நேரத்தை கால நீடிப்பு செய்து தர வேண்டும் என அனைத்து கட்சியினர் வாக்கு சாவடியில் உள்ள அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலை பகுதியில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் வாக்கு சாவடி மையங்களிலும் கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News