செய்திகள்
மழை

வால்பாறை, பொள்ளாச்சியில் பலத்த மழை

Published On 2021-05-16 09:42 GMT   |   Update On 2021-05-16 09:42 GMT
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே மழை பெய்து வருகிறது.

கோவை:

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு டவ்தே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. புயல் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, ராமநாதபுரம், காந்திபுரம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அத்தியாவசிய கடைகளான மளிகை, காய்கறி மார்க்கெட் போன்றவற்றில் மக்கள் கொட்டும் மழையிலும் பொருட்களை வாங்கி சென்றனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு வனப்பகுதியில் சின்னாறுபதி மழைவாழ் கிராமம் உள்ளது. இங்கு 48 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெய்த கனமழைக்கு மரங்கள் முறிந்து வீடுகள் மீது விழுந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பி தங்கள் குழந்தைகளுடன் அங்குள்ள பாறை இடுக்குகளில் தங்கினர். தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மேலும் வீடுகளின் மீது விழுந்த மரங்களை அகற்றினர்.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மழைக்கு அக்காமலை எஸ்டேட் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து தெருக்களில் விழுந்து கிடந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியில் ஓடிவந்தனர்.

கேரளா மற்றும் நீலகிரியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்ட உயரம் படிப்படியாக உயர்ந்து 87.50 அடியை எட்டியது. ஒரே நாளில் அணையின் நீர்மட்ட உயரம் 5 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க மின்சார உற்பத்திக்காக அணையில் 2 எந்திரங்கள் இயக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. வினாடிக்கு 1500 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கோவையில் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிகபட்சமாக கோவை மாவட்ட சோலையாறில் 170, வால்பாறை பி.ஏ.பி. 114, வால்பாறை தாலுகா 108, சின்னக்கல்லாறு 100, சின்கோனா 91, ஆழியாறு 52, பொள்ளாச்சி 25, சூலூர் 11, கோவை தெற்கு 10, கோவை விமான நிலையம் 7.8, பெரிய நாயக்கன் பாளையம் 7, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் 6, மேட்டுப்பாளையம் 4.5 என மொத்தமான மாவட்ட முழுவதும் 706.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

Tags:    

Similar News