செய்திகள்
போராட்டம்

உளுந்தை ஊராட்சியில் முறைகேட்டை கண்டித்து வேட்பாளர் போராட்டம்

Published On 2021-10-13 13:30 GMT   |   Update On 2021-10-13 13:30 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் உளுந்தை ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வேட்பாளர் போராட்டம் நடத்தினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஒன்றியக்குழு உறுப்பினர் இடங்களுக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர், 47 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 47 ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 30 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதம் 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் சேர்த்து 25 இடங்களுக்கு கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உளுந்தை, ஏகாட்டூர், இறையாமங்கலம் போன்ற 3 ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்போது உளுந்தை ஊராட்சியில் போட்டியிட்ட அதே பகுதியை சேர்ந்த கண்ணையன் மற்றொரு வேட்பாளரான வசந்தா ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது கண்ணையன் கூடுதல் வாக்கு பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீரென சிறிது நேரம் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் கண்ணையன் தோற்றதாகவும் வசந்தா வெற்றி பெற்றதாகவும் அறிவித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணையன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருதலைபட்சமாக தேர்தல் முடிவில் வெளியிட்டதாக கூறி அவர் மறுவாக்கு எண்ணிக்கை அல்லது மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தினார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் வசந்தா வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக கூறி மறு வாக்குப்பதிவு நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் மனு அளித்தார். இந்த சம்பவத்தால் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News