செய்திகள்
சங்கிலி பறிப்பு

கரூர் அருகே பள்ளி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2021-01-11 11:51 GMT   |   Update On 2021-01-11 11:51 GMT
கரூர் அருகே பள்ளி மாணவியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள தோரணக்கள்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் மைத்ரேயி (வயது 13). இவர் காக்காவாடியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மைத்ரேயி திருச்சி-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தோரணக்கள்பட்டி பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் உள்ள சர்வீஸ் சாலையில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மைத்ரேயிடம் ஸ்கூட்டரை நாங்கள் ஸ்டார்ட் செய்து தருகிறோம் எனக்கூறனர். பின்னர் திடீரென மைத்ரேயி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மைத்ரேயி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மர்மநபர்களும் தங்கசங்கிலியுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து மைத்ரேயி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக கரூர் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News