செய்திகள்
கோபிகா

ராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் பிணமாக மீட்பு

Published On 2020-12-02 10:42 GMT   |   Update On 2020-12-02 10:42 GMT
ராணிப்பேட்டை அருகே காணாமல் போன 3 வயது குழந்தை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. யாரும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் காந்தி. கட்டிட மேஸ்திரி. இவரது மகள் கோபிகா (வயது 3), நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள். இதனால் பதறிய பெற்றோர் அதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் கோபிகா விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறுமியை தேட, சிப்காட் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி சிறுமி கோபிகாவை தேடினர். இரவாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர். பின்னர் நேற்று காலை முதல் மீண்டும் தேடத்தொடங்கினர்.

அப்போது கிணற்றிலிருந்து 2 மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றி, சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கிணற்றில் இருந்து நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. அப்போது குழந்தை கோபிகா, சேற்றில் புதைந்த நிலையில் பிணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனர். இதைபார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதனர்.

அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது யாரும் கொலைசெய்து கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News