செய்திகள்
ராமதாஸ்

மாணவிகளை காக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Published On 2021-11-21 08:03 GMT   |   Update On 2021-11-21 08:03 GMT
கரூர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி, தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன.

மாணவியின் தற்கொலை கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வாசகமும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்குபவை ஆகும். ‘‘பாலியல் வன்கொடுமையால சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன்.

பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியாதில்ல’’ என்ற அந்த மாணவியின் இறுதி வாசகங்களைப் படிக்கும்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த அளவுக்கு மன உளைச்சலையும், அச்சத்தையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நிகழ்வு ஆகும். கடந்த 12-ந்தேதி கோவை தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இப்போது கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அவரது தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

ஒரு மாணவியின் தற்கொலையால் ஏற்பட்ட துயரம் தீருவதற்கு முன்பே, அடுத்த மாணவியையும் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றால் அந்த பாவிகளுக்கு சட்டத்தின் மீதும், அதை செயல்படுத்தும் அமைப்புகள் மீதும் பயமில்லை என்று தான் பொருள். இது மாணவிகளின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.

மற்றொருபுறம் பாலியல் சீண்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தவறு. இது இத்தகைய குற்றங்களைத் தடுக்க உதவாது. மாறாக, பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கான துணிச்சலையே தரும்.

பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான துணிச்சலை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதை தடுத்தல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுனர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News