செய்திகள்
விற்பனை செய்யப்பட்ட விசைத்தறிகளை மீட்டு லாரியில் ஏற்றிய போது எடுத்த படம்.

வாடகைக்கு விடப்பட்ட குடோனில் இருந்த விசைத்தறிகளை விற்பனை செய்த கட்டிட உரிமையாளர் கைது

Published On 2021-10-23 08:35 GMT   |   Update On 2021-10-23 08:35 GMT
கட்டிடத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 சுல்ஜர் விசைத்தறிகளை வைத்து தொழில் தொடங்க பிரபுதிட்டமிட்டு உள்ளார்.
பல்லடம்:

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டை அருகேயுள்ள வடவேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் மகன் பிரபு ( வயது 34) . இவர் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜோதிகாளிமுத்து (33) என்பவருக்கு சொந்தமான புதிய குடோன் கட்டிடத்தை கடந்த 2021 ஜனவரி மாதத்தில் மாத வாடகையாக ரூ.50 ஆயிரம் பேசி வைப்பு தொகையாக ரூ.2லட்சம் கொடுத்துள்ளார். 

அந்த கட்டிடத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 சுல்ஜர் விசைத்தறிகளை வைத்து தொழில் தொடங்க பிரபுதிட்டமிட்டு உள்ளார். இதன்படி 8 விசைத்தறிகளை அங்கு பொருத்தி அவைகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அந்தக் கட்டிடத்திற்கு புதிய மின்சார இணைப்பு கிடைப்பதில் தாமதமானதாலும், கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், விசைத்தறிகளை இயக்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும்,கட்டிட வாடகையை மாதம்தோறும் ஜோதி காளிமுத்துவின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாதம் ஒருமுறை சென்று விசைத்தறிகளை பார்வையிட்டு வந்த பிரபு கடைசியாக கடந்த ஜூன் மாதம் சென்று விசைத்தறிகளைப் பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதையடுத்து, விசைத்தறிகளை இயக்க முடிவு செய்த பிரபு கடந்த ஆகஸ்டு மாதம் குடோனுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த விசைத்தறிகளை காணவில்லை, இதுகுறித்து கட்டிட உரிமையாளர் ஜோதி காளிமுத்துவிடம் கேட்ட போது கடன் பிரச்சனையால் விசைத்தறிகளை அடமானம் வைத்துள்ளதாக கூறியுள்ளார். 

எப்படி என்னுடைய விசைத்தறிகளை நீங்கள் அடமானம் வைக்கலாம் என கூறி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜோதி காளிமுத்து  ஒரு மாத காலத்தில் பணம் தயார் செய்து அடமானம் வைத்த விசைத்தறிகளை மீட்டு தந்து விடுகிறேன் என பிரபுவிடம் அவகாசம் கேட்டுள்ளார். பிரபுவும் அவகாசம் அளித்துள்ளார்.

ஆனால் அவகாசம்  முடிந்தும் கட்டிட உரிமையாளர் ஜோதிகாளிமுத்து மீண்டும் கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால்  தனது விசைத்தறிகளை  மீட்டுத் தருமாறு, அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் விசைத்தறி உரிமையாளர் பிரபு புகார் அளித்தார். 

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜோதிகாளிமுத்துவிடம் விசாரணை செய்தபோது, விசைத்தறிகளை அடமானம் வைக்காமல், பல்லடம் அருகே உள்ள ராசாகவுண்டம்பாளையம் சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு ரூ. 45 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள விசைத்தறிகளை உரிமையாளருக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்த ஜோதிகாளிமுத்துவை கைது செய்த போலீசார்  அவரால் விற்கப்பட்ட 8 விசைத்தறிகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News