ஆன்மிகம்
மாசித்திருவிழா கொடியேற்றம் நடந்ததையும், அதனை காண குவிந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published On 2021-02-17 04:05 GMT   |   Update On 2021-02-17 04:05 GMT
திண்டுக்கல்லில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 12-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது.

அதைத்தொடர்ந்து மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.

அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில், பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து பாலக்கொம்பு கோவிலில் ஊன்றப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். இதனையடுத்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.

அதைத்தொடர்ந்து பகல் 12 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர்.

இதில் விஸ்வகர்மா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.

மாலை 5 மணி அளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மன் மின்னொளி தேரில் எழுந்தருளி வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News