செய்திகள்
தங்கம் கொள்ளை

யானை கவுனியில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கொள்ளை

Published On 2020-01-11 09:23 GMT   |   Update On 2020-01-11 09:23 GMT
யானை கவுனியில் போலீஸ் போல் நடித்து ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நகை கடை வைத்திருப்பவர் கமலேஷ். இவரிடம் வேலை பார்ப்பவர் தினேஷ்குமார்.

சென்னையில் தங்க கட்டிகளை வாங்கிச் சென்று ஆந்திராவில் அதை நகைகளாக செய்து விற்பார்கள். இதற்கு தங்க கட்டி வாங்குவதற்காக ஒரு காரில் நேற்று 1 கோடியே 70 லட்சம் ரூபாயுடன் தினேஷ் குமார் சென்னை வந்தார்.

பாரிமுனை என்.எச். போஸ் சாலையில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் வழக்கமாக தங்கம் வாங்கும் வினய் என்பரிடம் பணத்தை கொடுத்தார். அவரிடம் 4.3 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகளை வாங்கினார்.

தங்க கட்டி இருந்த பையை எடுத்துக்கொண்டு, தினேஷ் காரில் ஏறுவதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் யானை கவுனி வீரப்பன் தெரு வழியாக நடந்து சென்றார். வால்டாக்ஸ் ரோடு அருகே அவர் சென்றபோது ‘டிப்டாப்’ ஆக இருந்த 4 பேர் அவரை வழிமறித்தனர்.

நாங்கள் சி.பி.ஐ. போலீஸ். உங்களிடம் துப்பாக்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. பையை சோதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

பையை திறந்து சோதித்து விட்டு தினேஷ் குமாரிடம் கொடுத்தனர்.

பையை திருப்பி வாங்கிய அவர், தங்க கட்டிகள் பத்திரமாக இருக்கின்றனவா? என்று பையை திறந்து பார்த்தார்.

அப்போது பைக்குள் அவர் வைத்திருந்த தங்க கட்டிகள் இல்லை. இதனால் தினேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் என்று கூறியவர்கள் அந்த தங்க கட்டிகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸ் என்று கூறி ஏமாற்றியது யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? நடந்த சம்பவம் என்ன? என்பது குறித்து யானை கவுனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News