செய்திகள்
கொரோனா வைரஸ்

கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்- மத்திய அரசு வெளியீடு

Published On 2021-05-17 03:52 GMT   |   Update On 2021-05-17 03:52 GMT
அறிகுறி இருப்பவர்களுக்கு பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி வழி ஆலோசனை மேற்கொள்ளலாம். இணை நோய் இருப்பவர்கள், ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
புதுடெல்லி:

கொரோனா வைரசின் 2வது அலை மிக மோசமாக நாட்டை அச்சுறுத்தி வருகிறது. முதலில் வட மாநிலங்களில் வேகமாக பரவிய 2வது அலை இப்போது தென் மாநிலங்களையும் தாக்கியுள்ளது. இந்த 2 வது அலை பெரு நகரங்கள் மட்டும் அல்லாது கிராமங்களையும் நோக்கி நகர்கிறது.

கொரோனா இரண்டாம் அலை நகர மற்றும் கிராம பகுதிகளுக்கும் நகர்ந்து வருவதால், மத்திய அரசு ஊரக அளவிலான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், கிராம அளவிலான கண்காணிப்பு, அந்தந்த பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் சிகிச்சை, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கான பயிற்சி வழங்குவது போன்றவை குறித்து கூறப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகளில் கொரோனாவை சமாளிக்க ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்புகள் தயாராக உள்ளதா என்பதை உறுதி செய்யும்படியும் கூறியுள்ளது.

மேலும் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழுவினரின் உதவியுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் இன்ப்ளூயன்ஸா போன்ற நோய் அல்லது கடுமையான சுவாச தொற்று இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். அதனை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

அறிகுறி இருப்பவர்களுக்கு பகுதி சுகாதார அதிகாரிகளுடன் தொலைபேசி வழி ஆலோசனை மேற்கொள்ளலாம். இணை நோய் இருப்பவர்கள், ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

பல்ஸ் ஆக்சிமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள் மூலம் தொற்று நோய் பாதிப்பின் எண்ணிக்கை அதன் உயர்வை பொறுத்து நோய் கண்காணிப்பு திட்ட வழிகாட்டுதல்படி, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிய வேண்டும்.



கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் செறிவை கண்காணிப்பது முக்கியம். இதற்காக, ஒவ்வொரு கிராமத்திற்கும் போதுமான அளவு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மா மீட்டர்கள் இருக்க வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகள் அறிகுறிகள் தோன்றியதில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டு தனிமை முடிந்த பிறகு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News