செய்திகள்
மீனவர்கள் மீட்பு

படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிய மேலும் 4 மீனவர்கள் உயிருடன் மீட்பு

Published On 2019-09-05 08:21 GMT   |   Update On 2019-09-05 08:21 GMT
படகு மூழ்கிய இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் புதுரோடு நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 24), தரக்குடியான் (25), முனியசாமி (47), ரஞ்சித் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), காந்தகுமார் (23), உமாகாந்த் (19), செந்தில்வேல் (31), காளிதாஸ் (31) ஆகிய 10 மீனவர்கள் கடந்த 29-ந் தேதி மீன்பிடி படகு வாங்குவதற்காக கடலூர் சென்றனர். படகை வாங்கிய அவர்கள் அங்கிருந்து கடல் மார்க்கமாக கடந்த 3-ந் தேதி ராமேசுவரத்திற்கு புறப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம், மல்லிபட்டனம் கடலில் வந்து கொண்டிருந்தபோது கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதில் சிக்கிய படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. 10 மீனவர்களும் கடலில் விழுந்து மாயமானார்கள்.

இதனிடையே விபத்து நடந்த பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த செந்தில்வேல், காளிதாஸ் ஆகிய 2 மீனவர்களையும் மல்லிபட்டனம் மீனவர்கள் மீட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி கடலில் விழுந்து மாயமான 8 பேரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் மற்றும் மல்லிபட்டனம் மீனவர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே மீனவர்கள் கடலில் விழுந்து மாயமான விவகாரம் ராமேசுவரத்தில் காட்டுத்தீ போல் பரவியது. மீனவர்களை மீட்டுத் தரக்கோரி அவர்களது உறவினர்கள் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று முழுவதும் விபத்து நடந்த கடல் பகுதியில் தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

2-வது நாளாக இன்றும் காலை முதலே தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. படகு மூழ்கிய இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் கடலில் முனியசாமி, முனீஸ்வரன், தரக்குடியான், ரஞ்சித் ஆகிய 4 மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

2 நாட்களாக கடலில் தத்தளித்தபடியே இருந்ததால் அவர்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. தஞ்சையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாயமான 10 மீனவர்களில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News