செய்திகள்
கேஎஸ் அழகிரி

மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கேஎஸ் அழகிரி அறிக்கை

Published On 2021-04-29 08:32 GMT   |   Update On 2021-04-29 08:32 GMT
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டும் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி பாதிப்புகள் கடந்த ஆண்டு மார்ச் 4-ல் 28 ஆக இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 24 அன்று முன்னறிவிப்பு இல்லாமல் பொது ஊரடங்கை பிரதமர் மோடி பிரகடனம் செய்தார். தொடர்ந்து ஊரடங்கை மே 14 வரை நீடித்தார். இதனால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவை வார்த்தைகளால் வடிக்க இயலாது.

ஊரடங்கை அறிவிக்கிற போது, பிரதமர் மோடி ‘பாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனா எதிர்ப்பு போர் 21 நாளில் முடிந்து விடும்‘ என்று மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார். ஆனால், இப்படி கூறியதிலிருந்து 13 மாதங்கள் கடந்து இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற அவல நிலையை பார்க்கிற போது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் அலையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி பெருகியதா ? குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களாக இரண்டாவது அலை வரும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்ள எத்தகைய கட்டமைப்பு வசதிகளையும் பிரதமர் மோடி செய்யவில்லை.


கடந்த ஏப்ரல் 7-ந் தேதி பிரதமர் மோடி பேசும்போது, ‘கடந்த ஆண்டு கொரோனா எதிர்ப்பு போரில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல இந்த ஆண்டிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

எனவே வெற்றுப் பேச்சுக்களை தவிர்த்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டும். அதேபோல, மத்திய மாநில அரசுகள் கூட்டாட்சி முறைக்கு வலு சேர்க்கிற வகையில் பணியாற்றி கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News