தமிழ்நாடு
சரண்

பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

Published On 2022-01-25 08:45 GMT   |   Update On 2022-01-25 08:45 GMT
படப்பை குணா இன்று காலை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலத்தை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட 24 வழக்குகள் உள்ளன.

தொடர்ந்து தலைமறைவாக இருந்தபடியே படப்பை குணா குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது ஆட்கள் வெளியில் இருந்தபடியே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு திரைமறைவில் இருந்து கொண்டே குணா மூளையாக செயல்பட்டார்.

இதையடுத்து படப்பை குணாவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் படப்பை குணாவை பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலும் படப்பை குணாவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் போலீசில் சிக்காமலேயே இருந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சிறப்பு போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. அப்போதுதான் கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதன் பிறகே சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகள் பட்டியலை தயாரித்து அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதையடுத்து ரவுடி படப்பை குணாவையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டினார்கள்.

இதற்கிடையே படப்பை குணாவை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல போலீசார் திட்டமிட்டதாக அவரது மனைவி எல்லம்மாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தனது கணவர் எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரவுடி படப்பை குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. அவர் சரண் அடையும் பட்சத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பை குணாவின் மனைவியான எல்லம்மாளின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதன் பிறகு படப்பை குணா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது. போலீசார் அவரை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் படப்பை குணா இன்று காலை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் காஞ்சிபுரம் மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தலைமறைவாக இருந்த ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதேபோல் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த பொய்யாகுளம் தியாகு அரியானா மாநிலத்தில் பதுங்கி இருந்தார். அவரை கடந்த வாரம் தனிப்படை போலீசார் அரியானா சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

Tags:    

Similar News