செய்திகள்
மர்ம நபர்களிடம் நகையை பறிகொடுத்த சுமதி.

கீழ்வேளூர் அருகே நள்ளிரவில் பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-02-16 11:47 GMT   |   Update On 2021-02-16 11:47 GMT
கீழ்வேளூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் சென்னையில் துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி (வயது47). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சுமதி தனது மகன், மகள் மற்றும் மாமியார்- மாமனார் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சுமதியின் மாமனார் இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் இருந்த வெளியே சென்றார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் சுமதியின் வீட்டுக்குள் சென்று மறைவான பகுதியில் மறைந்து கொண்டனர். சிறிது நேரம் நேரம் கழித்து அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் திடீரென சுமதியின் முகத்தில் துணியை போட்டு மூடி அவரை கொல்லைப்புறத்துக்கு இழுத்து சென்று சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலிகளை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓட முயன்றனர்.

அப்போது சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் சுமதியின் கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சுமதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மோப்ப நாய் இலுப்பூர் வடக்கு தெரு வரை ஓடிச்சென்று நின்றது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நள்ளிரவு வீடு புகுந்து பெண்ணை தாக்கி மர்ம நபர்கள் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News