செய்திகள்
திமுக வேட்பாளர்கள் விருப்பமனு வினியோகம்

சட்டமன்ற தேர்தல்- தி.மு.க.வில் வேட்பாளர்கள் விருப்பமனு விறுவிறு

Published On 2021-02-22 03:06 GMT   |   Update On 2021-02-22 03:06 GMT
தி.மு.க.வில் இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இன்று 6வது நாளாக விருப்ப மனு வினியோகம் நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

இதற்கு 24-ந்தேதி வரை முதலில் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது 28-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 5-வது நாளாக விருப்பமனு வினியோகம் நேற்று நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதன் காரணமாக விருப்ப மனு அளிக்கப்படும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. திரைப்பட நடிகரும், தி.மு.க. பேச்சாளருமான போஸ் வெங்கட் அறந்தாங்கி தொகுதிக்கும், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் தென்காசி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகளுக்கும், வடசென்னை நிர்வாகி ஏ.டி.மணி ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

பட்டாசு வெடித்து, மேள-தாளம் முழங்க, ஆட்டம்-பாட்டத்துடன் சிலர் விருப்ப மனு அளிக்க வந்தனர். இதனால் அண்ணா அறிவாலயம் நேற்று களைகட்டியது. இதுவரையில் தி.மு.க.வில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வில் இன்று (திங்கட்கிழமை) 6-வது நாளாக விருப்ப மனு வினியோகம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News