செய்திகள்
நடிகை குஷ்பு

பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்- நடிகை குஷ்பு பேட்டி

Published On 2021-01-10 10:54 GMT   |   Update On 2021-01-10 10:54 GMT
பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.
புதுக்கோட்டை:

பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டையில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு கூட்டணியில் ஏற்றுக்கொள்ளவில்லை என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் உரிய முறைப்படி தலைமை தான் முடிவு செய்து பதில் சொல்வார்கள்.


அ.தி.மு.க. பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேசியது பற்றி மாநில தலைவர் முருகன் பதில் அளிப்பார். பா.ஜ.க. தேசிய தலைவர் தமிழகம் வந்த பின் கூட்டணி முடிவாகுமா? என்பது எனக்கு தெரியவில்லை. கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க.வுக்கும், தற்போதும் வேறுபாடு உள்ளது. அதனால் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வேன்.

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் இருக்கும். கூட்டணிகள் முடிவாகி அறிவிப்பார்கள். சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது எனக்கு தெரியாது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். ரஜினிகாந்தை அரசியலுக்கு வர பா.ஜ.க. தான் நிர்பந்தம் செய்தது என்பதை வேறு யாரும் சொல்லக்கூடாது. அவர் தான் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், 'இந்தியாவில் பா.ஜ.க.வை பார்த்து பயந்து ஓடுகிறார்கள். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியை போல தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பா.ஜ.க.வுக்கு கிடைக்கபோகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்' என்றார்.
Tags:    

Similar News