உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல்- 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2021-12-08 18:04 GMT   |   Update On 2021-12-08 18:04 GMT
திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பானுபிரியா (வயது 38). இவரது கணவர் ஸ்ரீ முருகா (42). இவர் திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

இந்தநிலையில் வீரராகவபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்கும் ஆபரேட்டர்களான வீரராகவபுரம் காலனியை சேர்ந்த வினோத்குமார் மற்றும் தண்டலம் காலனியை சேர்ந்த தெருவிதி ஆகியோர் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பானுபிரியா மாவட்ட கலெக்டர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து ஊராட்சி சட்டப்படி மேற்கண்ட இருவரையும் பணியில் இருந்து நீக்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்கும் தெருவிதி, ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசியும், அவரது கணவரான வக்கீல் ஸ்ரீ முருகாவையும் தகாத வார்த்தையால் பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்கும் ஆப்பரேட்டர் வினோத்குமார் தனது மனைவி கண்ணம்மாள், உறவினர் தேவேந்திரன் ஆகியோருடன் சென்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வக்கீல் ஸ்ரீ முருகாவை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து வீரராகவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பானுபிரியா மற்றும் அவரது கணவர் ஸ்ரீ முருகா இருவரும் தனித்தனியாக செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இது சம்பந்தமாக தெருவிதி, வினோத்குமார், தேவேந்திரன், கண்ணம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் இது குறித்து வீரராகவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பானுபிரியா மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோரிடமும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News