உள்ளூர் செய்திகள்
மரணம்

ஈரோட்டில் கட்டுமான பணியின் போது சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2022-04-17 05:10 GMT   |   Update On 2022-04-17 05:10 GMT
மொடக்குறிச்சி போலீசார் சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி மற்றும் மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி:

ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்காடு பகுதியில் 60-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணிக்கு சொந்தமான வீடு கட்டுமான பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த கட்டுமான பணியின் மேஸ்திரியாக வெண்டிபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்த கட்டுமான பணியில் ஈரோடு வெண்டிபாளையம் பாலதண்டாயுத பாணி வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரி (50), ராஜு (42), சாந்தி (44) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் 6 அடி உயரத்திற்கு ஹாலோ பிளாக் கற்களால் சுவர் வைத்துள்ளனர். தொடர்ந்து அடுத்த நாள் (நேற்று) கட்டுமான பணியில் ராஜேந்திரன், மாதேஸ்வரி, ராஜு, சாந்தி ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சுவர் காயாமல் ஈரபதத்துடன் இருப்பதாக ராஜேந்திரன், மேஸ்திரி பொன்னுசாமியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் இது குறித்து உரிமையாளரிடம் பேசி விட்டதாகவும் இன்றைக்கு முழு சுவரையும் வைக்கனும் என கூறி விட்டு சென்றார்.

இதையடுத்து ராஜேந்திரன், ராஜூவும் மரச்சாரத்தின் மீது மீதமுள்ள சுவர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுவர் முழுவதும் சரிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதில், கட்டிட வேலை செய்து வந்த ராஜேந்திரன், ராஜு, மாதேஸ்வரி ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில், ராஜேந்திரனுக்கு தலையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மாதேஸ்வரிக்கு வலது கை விரல்களிலும், ராஜூவுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார். காயம் அடைந்த மாதேஸ்வரி, ராஜூ 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் சுயேச்சை கவுன்சிலர் தண்டபாணி மற்றும் மேஸ்திரி பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News