வழிபாடு
பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 28 உண்டியல்கள்

அழகர்கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 28 உண்டியல்கள்

Published On 2022-04-11 05:48 GMT   |   Update On 2022-04-11 05:48 GMT
அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 28 உண்டியல்கள் உள்ளன. கள்ளழகர் மதுரைக்கு வரும் போது உண்டியல்கள் உடன் கொண்டு வரப்படுகின்றன.
பிரசித்தி பெற்ற அழகர்கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 12-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. 13-ந்தேதியும் திருக்கல்யாண மண்டபத்தில் அதே மாலை நேரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 14-ந் தேதி சித்திரை மாதம் 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலையில் அதே மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.

அன்று மாலை 6.15 மணிக்கு கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுவார். பின்னர் இரவு 7 மணிக்கு கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி வழியாக மதுரையை நோக்கி புறப்படுகிறார்.

தொடர்ந்து பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழகரை வரவேற்பார்கள். அன்று இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு 12 மணிக்கு அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 5.50 மணிக்கு மேல் 6-20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

மறுநாள்(17-ந்தேதி) தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மேல் 3 மணிக்குள் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அழகர் காட்சி தருவார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். 18-ந் தேதி பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கு விழாவும், 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை 2-30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் கள்ளர் திருக்கோலத்துடன், கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி திருமாலிருஞ்சோலைக்கு பிரியாவிடை பெற்று கள்ளழகர் செல்வார்.

20 ந் தேதி புதன்கிழமை அதிகாலை 3- 30 மணிக்கு அப்பன் திருப்பதி வழியாக சென்று, அன்று பகல் 1-30 மணிக்கு அழகர்கோவிலுக்கு சுவாமி இருப்பிடம் சேருகிறார். 21 ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

முன்னதாக, இந்த திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 28 உண்டியல்களும் அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சியுடன் போது சுவாமியுடன் 28 உண்டியல்களும் எடுத்து செல்லப்படுகின்றன. ஆங்காங்கே பக்தர்களிடம் காணிக்கை உண்டியல்களில் பெறப்படுகின்றன. பின்னர் கள்ளழகர் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் போது, உண்டியல்களும் கோவிலுக்கு ெகாண்டு வரப்படுகின்றன. சித்திரை திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News