செய்திகள்
கோப்புபடம்

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்களை வரவழைத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-05-19 07:43 GMT   |   Update On 2021-05-19 07:43 GMT
தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நேரில் வரவழைத்து மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

சென்னை:

தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் நர்சரி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை 10 ஆயிரத்து 500 தனியார் பள்ளிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு மிகப் பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் இந்த ஆண்டு வருமான இழப்பை சரிகட்டுவதற்காக மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பள்ளி கல்வித்துறை தற்போது மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் கொரோனா கட்டுப்பாடு வரலாம் என்று எதிர்பார்ப்பதால் இப்போதே மாணவர் சேர்க்கையை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நேரில் வரவழைத்து மாணவர் சேர்க்கைகளை மேற்கொள்வதாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.


இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பொது முடக்க காலத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மட்டும் மேற்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மாறாக மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக்கட்டணம் செலுத்துதல் போன்ற காரணங்களுக்காக பெற்றோர்களை நேரில் வரவழைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய பணிகளை பள்ளிகள் இணைய வழியில் மேற்கொள்ளலாம். நோய் பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும்’ என்றார்.

Tags:    

Similar News