செய்திகள்
முதுமலை சாலையோரத்தில் புள்ளிமான்கள் கூட்டமாக நின்று பச்சை புற்களை மேயும் அழகிய காட்சியை படத்தில் காணலாம்.

முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு - வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2021-10-14 13:15 GMT   |   Update On 2021-10-14 13:15 GMT
முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்:

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வனப்பகுதியில் வாகனத்தில் சென்று வனவிலங்குகளை காண வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர். இதனால் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இதற்கிடையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காணும் ஆவலில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். அப்போது தொந்தரவு கொடுத்தால், அவர்களை காட்டுயானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இதை உணராமல் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

தொடர் விடுமுறை வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற விதிமுறையை கடைபிடிக்காமல் அத்துமீறி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதுமலை சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை ரசித்து செல்கின்றனர். மிதமான வேகத்தில் வாகனத்தில் சென்றவாறு வனவிலங்குகளை கண்டு ரசிப்பது தவறில்லை. ஆனால் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் காட்டுயானைகள் திடீரென ஆவேசமடைந்து தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News