செய்திகள்
நடிகை விஜயசாந்தி

நடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைகிறார்

Published On 2020-11-24 08:39 GMT   |   Update On 2020-11-24 11:36 GMT
பிரபல நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐதராபாத்:

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள்.

தென்னிந்திய பிரபல நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அடுத்து பிரபல நடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1998-ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இருந்த போது இவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.

2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விஜயசாந்திக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அடுத்து மீண்டும் பா.ஜனதாவில் இணைய திட்டமிட்டுள்ளார். விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைவார் என்று தெரியவந்துள்ளது.

இது பற்றி பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் டி.கே. அருணா கூறியதாவது:-

நடிகை விஜயசாந்தி விரைவில் பா.ஜனதாவில் இணைகிறார். இது தவிர மேலும் பலர் பா.ஜனதாவில் இணைய உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News