செய்திகள்
மு.க.ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2020-11-04 23:05 GMT   |   Update On 2020-11-04 23:05 GMT
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் 11 பேர் உயிரை பறித்துள்ள நிலையில் அது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவும் இல்லை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவும் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

சூதாட்டம் கொடுமையானது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுப்பது குறித்து அரசு சட்டமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை மாதமே உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பிறகாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சிறிய தொகையை முதலில் பரிசாக கொடுத்து ஆசை காட்டி பிறகு பெரிய தொகைக்கு நஷ்டத்தை இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை இருட்டில் தள்ளும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்?. என்ன உள்நோக்கம்?

எந்திரங்களை வைத்து இளைஞர்களின் உயிரை பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News