உள்ளூர் செய்திகள்
ஈரோடு பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல வந்திருந்த பொதுமக்கள்.

ஈரோடு: தொழிலாளர்கள் பொங்கல்பண்டிகை கொண்டாட சொந்த ஊர் பயணம்- பஸ், ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Published On 2022-01-12 09:36 GMT   |   Update On 2022-01-12 09:36 GMT
ஈரோட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பொங்கல்பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பஸ், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:

ஈரோட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பொங்கல்பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் பஸ், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படஉள்ளது.   மேலும் வருகிற 17-ந் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
பொங்கல்பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பலர் முன்கூட்டியே சொந்தஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். 

ஏற்கனவே சொந்தஊருக்கு செல்வதற்காக திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகளும் தற்போது செல்கின்றனர். இதனால் ரெயில்நிலையம், பஸ்நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இதேப்போல் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்களும் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். 

பொங்கல்பண்டிகை மற்றும் தைப்பூசத்தையொட்டி அரசு அலுவலர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையும், தொழிலாளர்களுக்கு ஒரு வாரமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பொங்கல்பண்டிகை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நேற்று முதல் பஸ்நிலையம், ரெயில்நிலையங்களில் குவிந்து வருகின்றனர். வெளிமாவட்ட மக்களுக்காக சிறப்புபஸ்களும் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. 

கொரோனாபரவல் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும்  பஸ்களில் 75 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று ஈரோடு பஸ்நிலையத்தில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
Tags:    

Similar News