செய்திகள்
டெங்கு கொசு

மதுரையில் படிப்படியாக அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

Published On 2020-12-01 10:23 GMT   |   Update On 2020-12-01 10:23 GMT
மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து டெங்கு பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
மதுரை:

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி நாளொன்றுக்கு 30-க்கும் குறைவான நபர்களே கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்பு முழுமையாக குறைவதற்குள், அடுத்ததாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கடந்த காலங்களில் மதுரையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்த வருடத்தில் எதிர்பார்த்தது போல், டெங்கு பாதிப்பு இல்லை. இருப்பினும், செப்டம்பர் மாதத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதுபோல், அக்டோபர் மாதத்தில் 6 பேரும், நவம்பர் மாதத்தில் இதுவரை 17 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பு விகிதம் கடந்த வருடத்தை ஒப்பிடும் போது, குறைவுதான். கடந்த வருடம் இதே மாதங்களில் 80 முதல் 100 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அடுத்தடுத்த மாதங்களில் டெங்கு பாதிப்பு 3, 6, 11 என்ற எண்ணிக்கையில் படிப்படியாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், நகர் மற்றும் புறநகர் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது வரை டெங்கு பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது. வரும் நாட்களில் ஒருவேளை டெங்கு பாதிப்பு அதிகரித்தால், அதற்கு ஏற்றார்போல், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடு, வீட்டுமொட்டை மாடி, தெருக்கள் மற்றும் நம்மை சுற்றி உள்ள இடங்களில் மழை நீர் தேங்காத வகையில் கண்காணிக்க வேண்டும். இதுபோல், சுத்தமான தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News