ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்.

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

Published On 2021-02-25 07:41 GMT   |   Update On 2021-02-25 07:41 GMT
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வரவில்லை. இங்கு சதய விழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதே போன்று சித்திரை திருவிழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேரோட்டமும் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா கொண்டாடப்படவில்லை. இதனால் தேரோட்டமும் நடைபெற வில்லை. இந்த ஆண்டு சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News