செய்திகள்
தேங்காய் நீர்

சூடான தேங்காய் நீர் புற்றுநோய் செல்களை அழிக்குமா?

Published On 2019-08-29 03:04 GMT   |   Update On 2019-08-29 03:04 GMT
சூடான தேங்காய் நீரை பருகினால், அது புற்றுநோய் செல்களை அழிக்கும் என சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் குறுஞ்செய்தியின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டர் மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராக பணியாற்றும் ராஜேந்திர பட்வே கூறியதாக சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்தி ஒன்று வைரலாக பரவி வந்தது. 



அது என்னவெனில், துருவிய தேங்காயை சூடான நீரில் கலந்து, பின் அதனை வடிகட்டி அதன்மூலம் கிடைக்கும் சாறை உட்கொண்டால் அது ஆபத்தான புற்றுநோய் செல்களை அழிக்கும் என்றும், இதனால் உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குறுஞ்செய்தி கடந்த மே மாதம் முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த குறுஞ்செய்தியின் உண்மை தன்மையை கண்டறிய சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரித்த போது, அவர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் சூடான தேங்காய் நீர் புற்றுநோய் செல்களை அழிக்கும் என தான் கூறியதாக பரவும் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து கடந்த மே மாதம் அறிக்கை வெளியிட்டதாகவும் மருத்துவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இது முற்றிலும் தவறான தகவல் என்பது உறுதியாகியுள்ளது. 



இதுபோன்று வைரலாகும் குறுஞ்செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News