செய்திகள்
முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக ரூ.20ஆயிரத்தை மாணவரிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

ஐஸ் வியாபாரி மகனின் மருத்துவ படிப்பு செலவை ஏற்றார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Published On 2020-11-21 09:23 GMT   |   Update On 2020-11-21 09:23 GMT
கரூரில் ஐஸ் வியாபாரி மகனின் மருத்துவ படிப்பு செலவை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்றுக்கொண்டார்.
கரூர்:

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் ஊராட்சி, அரசு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்து. இவர் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 933 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 297 மதிப்பெண்களும் பெற்றார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மாரிமுத்துவுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், ஏழ்மை காரணமாக அந்த மாணவரின் பெற்றோரால் கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்த மாணவனையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து, அந்த மாணவனுக்கான மருத்துவப்படிப்பு முடிக்கும் வரை அவரது கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக ரூ.20 ஆயிரத்தை மாணவரிடம் வழங்கினார்.

இதுகுறித்து மாணவர் மாரிமுத்து கூறுகையில், நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றும், மருத்துப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல் போனதால் மன உளைச்சலில் இருந்தேன். அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம், மருத்துவ கலந்தாய்வில் எனக்கு சொந்த மாவட்டமான கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. ஆனாலும், குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக கல்லூரி கட்டணத்தை கட்ட வழியில்லாமல் தவித்து வந்தோம். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இருந்து அழைப்பு வந்தது. பெற்றோருடன் நேரில் சென்று சந்தித்தேன். அப்போது அவர், எனது 5 ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான கல்லூரி கட்டணம் முழுவதையும் ஏற்றுகொள்வதாக தெரிவித்தார். மருத்துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Tags:    

Similar News