ஆன்மிகம்
ராமேசுவரத்தில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய அக்னிதீர்த்த கடற்கரை.

ராமேசுவரத்தில் களை இழந்த ஆடிப்பெருக்கு: அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது

Published On 2020-08-03 05:07 GMT   |   Update On 2020-08-03 05:07 GMT
முழு ஊரடங்கால் ராமேசுவரத்தில் ஆடிப்பெருக்கு களை இழந்தது. அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது.
ஆடிப் பெருக்கு நாளன்று தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பெண்கள் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி புதிதாக திருமாங்கல்ய கயிறு கட்டி பூஜை செய்து வழிபடுவார்கள். அன்று கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் பக்தர்கள் யாரும் வராத நிலையில் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல் ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கோவிலும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. பரமக்குடியில் ஆடி பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் கோவில்களிலும், வைகையாற்றிலும் திருமாங்கல்ய கயிறை மாற்றுவது வழக்கம். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பெண்கள் தங்களது வீட்டிலேயே சிறப்பு பூஜைகள் செய்து மாற்றிக்கொண்டனர்.

வழக்கமாக கோவில் செல்பவர்களும், பூணூல் அணிபவர்களும் வீடுகளிலேயே தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News