செய்திகள்
கேஎஸ் அழகிரி

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி

Published On 2019-12-06 07:59 GMT   |   Update On 2019-12-06 09:23 GMT
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை:

சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கார் நினைவு நாள் கடை பிடிக்கப்பட்டது.

இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கார் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து மதத்தையும், இந்திய சமூகத்தையும் புனரமைத்தவர் என்றும் போற்றுதலுக்குரியவர்.



உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம். முறையாக இட ஒதுக்கீடு மறுவரையறைகள் செய்து சரியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

எங்கள் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. மறுவரையறை, இடஒதுக்கீட்டை முறையாக செய்ய வலியுறுத்தி இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் குழப்பமான திறமை இல்லாத ஆணையமாக செயல்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது. இது தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு.

தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது பற்றிய முழு விவரமும் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளது. மற்ற மாநிலங்களில் அரசியல் தலையீடு பிரச்சினை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், கார்த்தி சிதம்பரம், மாநில நிர்வாகிகள் கோபண்ணா, தாமோதரன், சிரஞ்சீவி, செல்வம், அருள்பெத்தையா, ராயபுரம் மனோகர், உ.பலராமன், செல்வபெருந்தகை, ஜான்சிராணி, பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் மற்றும் நவாஸ், நாஞ்சில் பிரசாத், தமிழ்செல்வன், சுகுமார்தாஸ், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News