செய்திகள்
திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

பொதுவினியோக திட்டத்துக்கு 2 ஆயிரம் டன் அரிசி அனுப்பும் பணி - சாலையில் அணிவகுத்து நின்ற லாரிகளால் பொதுமக்கள் அவதி

Published On 2021-06-18 15:00 GMT   |   Update On 2021-06-18 15:00 GMT
திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு பொது வினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கும் பணி ேநற்று நடந்தது. இதையொட்டி அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் சாலையில் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி ஒவ்வொரு சாகுபடி பருவத்திலும் நடைபெற்று வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மாவட்டத்தில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு, சேமிக்கப்படுகிறது.

பின்னர் அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

அதன்படி நேற்று திருவாரூரில் இருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் அரிசி பொது வினியோகத்திட்டத்துக்காக அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். 42 பெட்டிகளில் அரிசி ஏற்றப்பட்டது. இதையடுத்து 2 ஆயிரம் டன் அரிசியுடன் சரக்கு ரெயில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

தற்போது பல்வேறு நிர்வாக வசதிக்காக கூடுதலான அளவில் அரிசி மற்றும் அரவைக்கான நெல் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அரிசி மற்றும் நெல் மூட்டைகளை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரும் லாரிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த லாரிகளை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி திருவாரூர் ரெயில் நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றும் இடத்தில் இல்லை. இதன் காரணமாக லாரிகள் ரெயில் நிலையம் அருகே லாரிகள் திருவாரூர்- நாகை நெடுஞ்சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. வழக்கம்போல் நேற்றும் லாரிகள் நாகை நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்து வருவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News